Thursday 8 September 2011

அரசு அனுமதி தந்தால் நடைப்பயணம், இல்லையேல் ரத்து - சீமான்.

வேலூர் மத்திய சிறைக்கு அருகேயிருந்து இன்று காலை புறப்பட்டு, 5 நாட்களுக்கு இந்த பரப்புரை பயணம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தனது அறிக்கையில் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலை வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை சீமான் சந்தித்தார். மூன்று பேரையும் சந்தித்துவிட்டு வந்த சீமான், தடா.சந்திரசேகர், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் ஆகியோர் மூன்று உயிர்களை காத்த முதல்வர் அம்மா(ஜெ)வுக்கு நன்றி தெரிவித்து நடைபயணத்தை தொடங்குகிறோம் என்று கூறினர்.

அதன்படி நடைப்பயணம் வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் 100க்கும் மேற்பட்ட நாம் தமிழர் இயக்கத்தினருடன் சீமான், அற்புதம்மாள், தடா.சந்திரசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது பற்றி சீமானிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, சட்டம் ஓழுங்கு சீர்கெடும் எனக்கூறி கைது செய்துள்ளார்கள். சட்டத்துக்கு கட்டுப்பட்டு கைதாகிறோம் என்றார்.

மேலும் பேசிய சீமான், அரசாங்கம் நடைப்பயணம் செல்ல கட்டுப்பாடுகளை விதித்து அனுமதி தந்தால் கட்டுப்பாடுகளை மதித்து நடைப்பயணம் செல்வோம். இல்லையெனில் நடைப்பயணம் ரத்து செய்யப்படும். குறிப்பிட்ட திகதியில் கூட்டங்கள் மட்டும் நடைபெறும் என்றார்.

இரண்டு தினங்களுக்கு முன்பு பாண்டிச்சேரியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய சீமான், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களுக்கு அனுமதி தராமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

ஆனால் அம்மா ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் போராட்டங்கள் நடத்த அனுமதி தருகிறார். இவர் தான் உண்மையான ஈழத்தமிழர்கள் மீது அக்கறைக் கொண்ட ஈழத் தாய். இதே முன்னாள் முதல்வர் கருணாநிதி போராட்டங்களை முடக்கினார் என்று பேசினார்.

நன்றி :  பதிவு