Monday 5 September 2011

காலாண்டு தேர்வு அறிவிப்பு! ஆனால் சமச்சீர் புத்தகம் வழங்கப்படவில்லை!

சென்னை: காலாண்டு தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்னும் சமச்சீர் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12வது படிக்கும் மாணவ மாணவியர்கள் கவலையடைந்துள்ளனர்.
12ஆம் வகுப்புகள் தொடங்கி 2 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இப்போது வரை, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் முறையாக வழங்கப்படவில்லை. 10ம் வகுப்பு முடித்து பலர் மேல்நிலை பள்ளியில் சேர்ந்துள்ளனர். புதிய பாடப்பிரிவு எப்படியிக்கும் என மன குழப்பத்தில் உள்ள நிலையில், புத்தகங்கள் வழங்காததால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால், ‘எங்களுக்கு இன்னும் புத்தங்கள் வரவில்லை. வந்தவுடன் வழங்கப்படும். புத்தகங்கள் கிடைக்காதவர்கள் கடையில் சென்று வாங்கி கொள்ளுங்கள்’ என கூறுவதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இதுவரை சமச்சீர் கல்வி விவகாரத்தில் மட்டுமே குழப்பம் இருந்தது. மேல்நிலை பாடப்பிரிவுக்கு குழப்பம் இல்லை. பின்னர் ஏன் புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம் ஆகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. வரும் 22ம் தேதி காலாண்டு தேர்வு தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது. தேர்விற்கு இன்னும் 18 நாள்தான் உள்ளது. முழுமையாக புத்தகங்கள் வழங்காத நிலையில் எப்படி தேர்விற்கு தயராவது? என்பது புரியாமல் மாணவ, மாணவிகள் கவலையடைந்துள்ளனர்.