Saturday 3 September 2011

ஏழைகளுக்கு இலவச சிகிச்சை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

புதுடெல்லி: அரசு நிலத்தை மிக குறைந்த விலையில் குத்தகைக்கு எடுத்து கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைகள், அங்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு  இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில், அரசு நிலத்தை குறைந்த விலையில் குத்தகை எடுத்து, 37 தனியார் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 27 தனியார் மருத்துவமனைகள், ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளித்து வருகின்றன. ஆனால், பல  தனியார் மருத்துவமனைகள், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கவில்லை. இது குறித்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், அரசு நிலத்தை குறைந்த விலையில் குத்தகை எடுத்த தனியார் மருத்துவமனைகள், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும்' என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தனியார் மருத்துவமனைகளும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரனா மற்றும் ஏ.கே.பட்நாயக் தீர்ப்பு கூறுகையில், "டெல்லியில், அரசு நிலத்தை குறைந்த விலையில் குத்தகை எடுத்து மருத்துவமனை கட்டியுள்ளவர்கள், ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் தங்கள் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது.
தனியார் மருத்துவமனைகள், ஏழை புறநோயாளிகளுக்கு 25 சதவீதமும், உள்நோயாளிகளுக்கு 10 சதவீதமும் நிர்ணயம்செய்து, அவர்களுக்கு எந்த கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளனர்.