Wednesday 14 September 2011

அரக்கோணம் சித்தேரி ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்

  சென்னை: அரக்கோணம்  சித்தேரி  ரயில் விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மத்திய ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி தெற்கு ரயில்வே அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு மீட்பு, உதவிப்பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறினார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சமும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் வழங்கப்படும் என்று ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.அமைச்சர் திரிவேதி விபத்து நடந்த இடத்தைப் பார்க்கவும் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறவும் புதன்கிழமை சென்னை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டது.
மற்றும் விபத்து குறித்தும் பிற ரயில்களின் வருகை, புறப்பாடு குறித்தும் பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்க உடனடியாக சிறப்புத் தகவல் மையம் சென்னை சென்ட்ரலில் திறக்கப்பட்டது. அவசரத் தொலைபேசி எண் 044 - 2535 7398 என்ற எண்ணுடன் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.2 ரயில்கள் ரத்து: சென்னை சென்ட்ரலிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு புறப்பட வேண்டிய ஏற்காடு எக்ஸ்பிரஸ், பெங்களூர் மெயில் ஆகிய 2 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன. காட்பாடி வழியாகச் செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் வழியாகத் திருப்பிவிடப்பட்டது.