Thursday 8 September 2011

நளினி வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றம்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளங் காணப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் நளினி வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் முதல் புழல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நளினி இன்று காலை வேலூர் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புழல் சிறைச்சாலையில் அதிகாரிகளால் தான் துன்புறுத்தப்படுவதாக அவர் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்தே இன்று புழல் சிறையில் இருந்து அவர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரது கணவரும் ராஜீவ் கொலை வழக்கின் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டவருமான முருகன் வேலூர் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வரில் நளினியும் அடங்குகின்றார்.
அவர் தாக்கல் செய்த கருணை மனுவின் அடிப்படையில் அவரது மரணதண்டனை பின்னர் ஆயுற்கால சிறைத்தண்டனையாக மாற்றப்பட்டது.
ஏனைய மூவரான சாந்தன், பேரறிவாளன், மற்றும் நளினியின் கணவர் முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு இம்மாதம் ஒன்பதாம் திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும் இவர்கள் அண்மையில் சென்னை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கினை அடுத்து தண்டனையை நிறைவேற்றுவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

நன்றி : சக்தி செய்திகள்