Saturday 28 May 2011

பசுக்களை பாதுகாப்பது சாத்தியமில்லை- பணக்கார கோயிலின் பரபரப்பு முடிவு!


              உலகில் பெரும்பான்மை நாடுகளில் பெரும்பான்மை மக்களால் மாட்டிறைச்சி உண்ணப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் மாட்டிறைச்சியை குறிப்பிட்ட சதவிகிதத்தினர் நீங்கலாக, மற்றவர்களால் விரும்பி உண்ணப்படும்  உணவாகவும்,  ஏழைகள் வாங்கும் விலையிலும் கிடைக்கிறது. மாட்டிறைச்சிக்காக வயதான மாடுகளும், பால் கறவை முடிவுற்ற மாடுகளும், உரிமையாளர்களால் பராமரிக்க முடியாத நிலையில் விற்கப்படும் மாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு மாடுகளை விற்பதையும், மாட்டிறைச்சி உண்பதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சர்ச்சையாக்குவது சங்பரிவார்களின் வேலையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூட, ''பசுக்கள்-கன்றுகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.அவற்றை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று  பா.ஜ.க. கூறியிருந்தது.
இந்த அளவுக்கு பசுநேசனாக இவர்கள் தங்களை காட்டிக் கொள்வது பசுக்களின் மீதுள்ள கருணையால் அல்ல. இவ்வாறு சொல்வதின் நோக்கம், முஸ்லிம்கள் மற்றும் பிராமணரல்லாத சமூக மக்கள் பசுவை இறைச்சியாக பயன்படுத்துவதாலும், முஸ்லிம்கள் தியாகத்திருநாளின்போது குர்பானி கொடுப்பதாலும், இதை தடுக்கவேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே நோக்கம். இது ஒருபுறமிருக்க பசுக்கள் மீது இவர்களுக்கு உண்மையில் பரிவு இருக்குமென்றால் யார் பசுக்களை விற்க எண்ணுகிறார்களோ அவர்களிடமிருந்து அதை  விலைக்கு வாங்கி செலவு செய்து பாதுகாக்கட்டுமே! யார் தடுத்தார்கள்? அதுமட்டுமன்றி சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலையோரம் 'கவர்ச்சி படங்களை' தின்று உயிர் வாழும் பசுக்களை தேடி சென்று உணவளிக்கட்டுமே! மேலும்,  கோவில்களில் பக்தர்களால் காணிக்கையாக தரப்பட்டு சிலகோவில்களில் உரிய பராமரிப்பின்றி பசுக்கள் செத்து மடிவதாகவும், திருட்டுத்தானமாக 'கசாப்பு' கடைக்கு விற்பதாகவும் சிலமாதங்களுக்கு முன் ஒரு இதழ் செய்தி வெளியிட்டது. இந்த பசுநேசர்கள் முதலில் கோவில் பசுக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கட்டுமே! இதையெல்லாம் இவர்கள் செய்யமாட்டார்கள்.
மேலும், பசுக்களை பாதுகாப்பது என்பது சாத்தியமல்ல என்று உலகிலேயே பணக்கார கடவுளான[!]திருப்பதி வெங்கடேச பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து பசுதானத்திற்கு இடைக்கால 144 போட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.
''திருப்பதி கோவிலுக்கு, கோதானம் வழங்க பிரார்த்தித்துக் கொள்ளும் பக்தர்கள் வழங்கிய பசுக்கள், 900 வரை உள்ளன. இவற்றில் தற்போது, 140 பசுக்கள் மட்டுமே பால் கொடுக்கின்றன. பசுக்களை வளர்த்து பராமரிக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆண்டுக்கு மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவழித்து வருகிறது. இந்த பசுக்களால், நாள் ஒன்றுக்கு 1,500 லிட்டர் பால் கிடைக்கிறது. திருமலை கோவில் உட்பட திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த பல்வேறு கோவில்களின் பூஜைக்கு பால் பயன்படுத்தப்படுகிறது. கோசாலையில் பசுக்களை பராமரிக்க, 10 பேர் வரை கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது இங்கு ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளதால், வெளியிலிருந்து தினமும் 20 டேங்க் வரை பசுக்களின் தேவைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தொலைதூரத்திலிருந்து கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் பசுக்களினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு நான்கு பசுக்கள் இறந்தன.எனவே, கோதானமாக அளிக்கும் பசுக்களை பெற்றுக்கொள்வதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளது என்கிறது அந்த செய்தி.
தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் குவியும் திருப்பதி தேவஸ்தானத்தால் கூட பசுக்களை பராமரிக்க முடியவில்லை என்றால், அன்றாடங்காய்ச்சியான பாமரன் பால் வற்றிப்போன மாட்டை வைத்து கடடியழ வேண்டும் என சங்கபரிவார் சொல்வது தவறு என விளங்குகிறதல்லவா? எனவே இனியாகினும் பசுவை வைத்து அரசியல் செய்வதை சங்பரிவார கூட்டம் நிறுத்திக்கொள்ளுமா? செத்த பசுவின் தோலை உரித்த மனிதனை கொல்லும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமா? மனிதனுக்காக படைக்கப்பட்டவைகளை மனிதன் அனுபவிப்பதை தடுக்கும் மனித உரிமை மீறலை சங்பரிவார் கைவிடுமா? பொறுத்திருந்து பார்ப்போமே!
-முகவை அப்பாஸ்.

Friday 27 May 2011

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு!

முந்தைய தமிழக அரசு 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்தியது. மேலும் 2011 ஜூன் மாதம் தொடங்கும் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்படும் என்றும் முடிவு செய்திருந்தது.
புதிதாகப் பொறுப்பேற்ற ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, சமச்சீர் கல்வி முறையை நிறுத்திவிட்டு, அடுத்த ஆண்டுமுதல் புதிய பாடத்திட்டப்படி நடத்துவதற்கு முடிவெடுத்தது.
இம்முடிவினை எதிர்த்து, இந்தக் கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கே.ஷியாம் சுந்தர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
"தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது பற்றி ஆராய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.முத்துகுமரன் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின் பேரில், கடந்த கல்வியாண்டில் 1, மற்றும் 6ஆம் வகுப்புகளில் சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது.
இதற்காக சமச்சீர் கல்வி முறையிலான புதிய பாடத் திட்டத்தின்படி ரூ.200 கோடி செலவில் 9 கோடி புத்தகங்கள் அச்சிடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, பழைய பாடத் திட்ட முறையே தொடரும் என்றும், சமச்சீர் கல்வி முறை பற்றி ஆராய புதிதாக ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும் என்றும் முடிவெடுத்துள்ளது. அரசின் இந்த முடிவு அரசியல் சார்ந்த முடிவாகும் என்பதால் அறிவிக்கப்பட்டபடி இந்தக் கல்வியாண்டிலேயே 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இ‌ந்த மனு இ‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ரு‌கிறது.
நன்றி : இந்நேரம்.காம்.

Thursday 26 May 2011

முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்; முதல்வரின் மனநிலையில் இல்லை மாற்றம்!

முதல்வர் ஜெயலலிதா கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் அமைச்சர் இல்லாமலேயே தனது ஐந்தாண்டுகளை நிறைவு செய்து சாதனை படைத்தவர். ஜெயலலிதாவின் முஸ்லிம் விரோத செயல்பாடுகள் முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்றுதான் என்றாலும், கருணாநிதியின் துரோகங்கள் தந்த வலியால், இந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை முஸ்லிம் சமுதாயம் ஜெயலலிதா கட்சிக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உறுதுணையாக நின்றது.

அரசியலில் அடையாளம் தெரியாமல் இருந்த நிலையிலிருந்த ஜெயலலிதா, மீண்டும் அரியாசனம் ஏறியவுடன் முஸ்லிம் சமுதாயத்தின் மீதான தனது மனநிலையை வெளிப்படுத்தினார். அவரது அமைச்சரவையில் கவுண்டர் சமுதாயத்திற்கு 8 , தேவர் சமுதாயத்திற்கு 6 , வன்னியர் சமுதாயத்திற்கு 5 என அமைச்சர் பதவிகளை வழங்கியவர், தமிழகத்தில் சுமார் 13 சதவிகிதம் உள்ள முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒரே ஒரு அமைச்சர் பதவியை  வழங்கினார். அதுவும் நிதி, போக்குவரத்து, சட்டம், மின்சாரம், பொதுப்பணி போன்ற பிரபல்யமான துறைகள் எல்லாம் தமக்கு வேண்டிய சமுதாயத்திற்கு தந்துவிட்டு முஸ்லிம்களுக்கு 'சுற்றுச்சூழல்' என சுற்றலில் விட்டார்.

ஜெயலிதாவின் இந்த செயல், அவரது கடந்த கால அரசியல் தோல்வி அவருக்கு மன மாற்றத்தை தந்திருக்கும் என நம்பி வாக்களித்த முஸ்லிம்களுக்கு நெஞ்சில் நெருஞ்சியாய் குத்தியது. இருந்தாலும் 'ஆலை இல்லாத ஊருல இலுப்பைப் பூ சக்கரை' என்ற பழமொழிகேற்ப, ஏதோ ஒன்றாவது தந்தாரே என ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், அல்லாஹ் அந்த அமைச்சரையும் அற்பநாளில் இறப்பெய்த செய்துவிட்டான். [இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்]

மரியம்பிச்சை மரணமடைந்த செய்தியறிந்து முஸ்லிம்கள் மட்டுமன்றி உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டு கண்ணீர் வடித்த வேளையில், மரியம்பிச்சைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா. இது சற்றே ஆறுதலாக தெரிந்தது. மரியம்பிச்சை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது துறை ஒரு முஸ்லிமுக்கே வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருந்த வேளையில் அந்த நம்பிக்கையை தகர்த்தெறிந்து இருக்கிறார் ஜெயலலிதா.
கவர்னர் பர்னாலாபிறப்பித்த உத்தரவில்  மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் துறைகள் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் சின்னய்யாவுக்கு ஒதுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

''தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவுரையின் பேரில், மறைந்த அமைச்சர் என்.மரியம் பிச்சையிடம் இருந்த சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாடு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் ஆகிய துறைகள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னய்யாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், இனிமேல் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்கு பிரதிநித்துவம் இல்லாத ஆட்சி நடத்த ஜெயலலிதா நாடிவிட்டார் என தெரிகிறது. மேலும் இவரது கட்சியில் முஹம்மது ஜான் மற்றும் அப்துர்ரஹீம் ஆகிய முஸ்லிம் எம்.எல். ஏக்கள் இருக்கும் நிலையில் அவர்களை அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்காமல் புறந்தள்ளியிருக்கிறார். அதுமட்டுமன்றி ஜெயலலிதாவிற்கு நீண்டகாலமாக விசுவாசமாக இருக்கும் அன்வர்ராஜாவுக்கு இந்த பதவியை வழங்கியிருக்கலாம். அவரை மரியம்பிச்சை தொகுதி இடைத் தேர்தலில் நிறுத்தி வெற்றிபெற செய்திருக்கலாம். அதையும் ஜெயலலிதா தவிர்த்துள்ளார்.

ஆக ஜெயலலிதாவின் போக்கு 'மாறாதய்யா மாறாது; மனமும் குணமும் மாறாது' என்று அவரது அரசியல் ஆசான் பாடலில் பாடியது போலவே உள்ளது. கருணாநிதியின் பக்கம் முஸ்லிம்களின் ஆதரவு இனி ஒருபோதும் திரும்பாது இன்ஷா அல்லாஹ். அதேபோல  ஜெயலலிதா முஸ்லிம்கள் விசயத்தில் தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால் வரும் தேர்தல்களில்  முஸ்லிம்களின் வெற்றிச்சின்னம் 49 'ஓ வாக மாறிவிடும் என்பது நிதர்சனமான தெரிகிறது.
-முகவை அப்பாஸ்.

Wednesday 25 May 2011

துப்பாக்கிகளுக்குத் தடை!?

ராம் சன்வாரி, குல்ஷன் குமார், புரமோத் மகாஜன், ஷண்முகம் மஞ்சுநாத், சையித் மோடி, முனிஷ் சந்தர் பூரி, ராதிகா தன்வர், ஜெஸிக்கா லால், இவர்கள் அனைவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன? இவர்கள் அனைவருமே துப்பாகியால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள். துப்பாக்கிகள் கிடைப்பதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்திருக்குமாயின் இவர்களும், துப்பாக்கியால் அகால மரணமடைந்த ஆயிரக்கணக்கானவர்களும் மேலும் பல வருடங்கள் உயிருடன் இருந்திருப்பார்கள்.

இந்தியாவில் சுமார் 46,000,000 துப்பாக்கிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே தனியார்கள் அதிகம் துப்பாக்கி வைத்திருப்பதில் இந்தியாவுக்கு இரண்டாமிடம். 100க்கு 4.2 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர், ஆனால் பதிவு  செய்யப்பட்ட துப்பாக்கிகளின்படி 100க்கு 0.5 பேர் மட்டுமே வைத்திருக்கிறார்கள். ஆக, இந்தியாவில் பதிவு செய்யப்படாத, உரிமம் பெறப்படாத துப்பாக்கிகள் மிக அதிகமாக இருக்கின்றன. கள்ளச்சந்தையில் கிடைக்கும் துப்பாக்கிகளை கொண்டு நடத்தப்படும் கொலைக் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு கடினமாக இருப்பதுடன், கள்ளச்சந்தை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. கான்பூரிலுள்ள மக்ரந்த்பூரில் நூற்றுக்கணக்கான நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொல்கத்தாவில் பராங்கர் என்ற இடத்திலும், பீகாரில் மன்டாஸ் என்ற கிராமத்திலும், நலந்தாவில் ஆகார்பூர் கிராமத்திலும், மற்றும் பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் பல இடங்களிலும் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான பல துப்பாக்கி தொழிற்சாலைகள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சட்டபூர்வமான சந்தையில் ஒரு துப்பாக்கி வாங்க ரூ. 70,000 முதல் சில இலட்சங்கள் வரை செலவாகும், அது துப்பாக்கியின் தன்மை மற்றும் நிறுவனத்தை பொறுத்தது. ஆனால் கள்ளச் சந்தையில் இதில் பத்தில் ஒரு பங்கு விலையில் வாங்க முடியும்.

இது துப்பாக்கி குறித்த விஷயம் மட்டுமல்ல, மாறாக அதிகாரம் மற்றும் தான் என்ற கர்வத்துடன் இணைத்து பார்க்கப்பட வேண்டிய விஷயம். இதன் காரணமாகத்தான் தற்காப்பிற்காக தனியார் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. விழாக்களில் (திருமணம் போன்றவை) பயன்படுத்துவதற்கும், வரவேற்பறைகளில் வைப்பதற்கும் (அதிகாரத்தின் குறியீடாக) துப்பாக்கிகளை பலர் வாங்குகிறார்கள். திருமணங்களின் போது வானை நோக்கி சுடப்படும்போது சிலர்               கொல்லப்படுவதைப் பற்றி அடிக்கடி செய்திகளில் பார்க்கலாம். அத்துடன், இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்வதற்கோ அல்லது தங்களுக்கு பிடிக்காத குடும்பத்தினர், உறவினர் அல்லது நண்பர்களை கொல்ல இத்துப்பாக்கிகள் உபயோகிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் தற்காப்புக்காக ஒருவர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் பிரேசிலில் இதற்கு அனுமதியிருந்தாலும் வீட்டிற்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லை.

இந்தியாவில் தனியார் ஒருவர் துப்பாக்கி வைத்திருக்க செலவிட வேண்டியிருக்கும் தொகையை பார்த்தால் தற்காப்பு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உரிமையானதாக இருப்பது தெரிகிறது. துப்பாக்கிக்கு முழுமையான தடை கொண்டுவந்தால் மட்டும் போதாது, கள்ளச்சந்தையில் துப்பாக்கிகள் கிடைப்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். துப்பாக்கிகளின் துணைக் கொண்டு நடக்கும் தற்கொலைகள் மட்டும் கொலைகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது இந்தியாவில் தனியார்கள் துப்பாக்கி வைத்திருப்பது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்பது விளங்கும்.

தங்கள் உயிருக்கு ஆபத்திருப்பதாக கருதுபவர்கள் தனியார் பாதுகாப்பு படையை அமர்த்திக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி தரவேண்டும். ஒருவரின் உயிர் வாழும் உரிமையானது அடுத்தவரின் உயிரை குடிப்பதாக இருக்கக் கூடாது.
தகவல் : The Sunday Indian

Saturday 14 May 2011

மக்களை சென்றடைவதில் இந்திய ஊடகங்கள் பின்தங்கியுள்ளன

                                                   இந்தியாவிற்கு அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களே இப்போதைக்கு ஏற்றவை
நாளிதழ்கள், வார மற்றும் மாதப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் சமூக செல்வாக்கானது வழக்கமான மக்கள்நல பொருளாதாரத்தை மீறிச் செல்பவை. படித்தவர்கள் அதிகமுள்ள நாடுகளில் செய்தித்தாள்களை படிப்பவர்கள் மிக அதிகம். ஊடகங்களே மக்களை விழிப்புணர்வு பெற்றவர்களாக ஆக்குகின்றன.
நாளிதழ்களை பொருத்த வரை மற்ற எந்த நாட்டையும் விட இந்தியா முன்னணியில் இருக்கிறது. நாளிதழ்களை பொருத்த வரை 59,023,000 பிரதிகள் விற்பனையாகின்றன, அடுத்த இடத்திலிருக்கும் ஜெர்மனியில் 25,000,000 பிரதிகளே விற்பனையாகின்றன. நாளிதழ்கள் மற்றும் வாரா மற்றும் மாத இதழ்கள் ஆகியவற்றை கூட்டாக எடுத்துக்கொண்டாலும் 62,000,000 பிரதிகள் விற்று உலகில் சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்திலிருக்கிறது. ஆனால் செய்திகள் மக்களை சென்றடைவது என்று வருகிற போது உலகின் முதல் 10 இடங்களில் இந்தியா இல்லை. நபர் ஒருவருக்கு என்று வருகிற போது இந்தியா 1000 பேருக்கு 54.64 நாளிதழ்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது. இதில் உலக நாடுகளில் இந்தியா 28ஆம் இடத்திலிருக்கிறது. இதில் முதலிடத்திலிருக்கும் நார்வேயில் நாளிதழ்கள் 1000 பேருக்கு 554.10 என்ற விகிதத்திலிருக்கின்றன, அதாவது இந்தியாவை விட பத்து மடங்கு அதிகம். இதில் வார மற்றும் மாத இதழ்களையும் சேர்த்து கணக்கிடுகிற போது இந்தியா 48ஆவது இடத்திற்கு தள்ளப்படுகிறது. அதாவது 1000 பேருக்கு 60.09 என்ற விகிதத்தில் இருக்கிறது. இதிலும் நார்வேவுக்கே முதலிடம். வார மற்றும் மாத இதழ்கள் மக்களிடம் ஒரு கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை சொல்லத் தேவையில்லை. இதற்குக் காரணம் அவை செய்திகளை தீவிரமாக அலசுவதுடன் அவற்றைப் பற்றி பல்வேறு கருத்துக்களையும் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி என்று வருகிற போதும் இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 0.58 தொலைக்காட்சி நிலையங்கள் என்ற அளவிலேயே இருக்கிறது. இது நார்வேயில் 82.5ஆக இருக்கிறது, இதில் உலகில் இந்தியாவின் இடம் 152. 2010ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் 515 சானல்கள் இருக்கின்றன, இவற்றில் 150 சானல்களை பணம் செலுத்தி மட்டுமே பார்க்க முடியும். கேபிள் சந்தாதாரர்கள் விஷயத்தில் 1000 பேருக்கு 38.5 என்ற விகிதத்தில் இருக்கிறது.
செய்திகள் பரப்பப்படுவது என்பதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, பணம் செலுத்தி பெற முடிவது, இரண்டு, தரமான உள்ளூர் ஊடகங்கள் மிகக் குறைவாக இருப்பது. இந்தியாவில் நாளிதழ்கள் மற்றும் வார மற்றும் மாத இதழ்கள் விலை மிகுந்தவையாக இருக்கின்றன, தொலைக்காட்சிகள் மக்களில் பலருக்கு கிடைக்கப்பெறாதவையாக இருக்கின்றன. இந்தியாவில் ஒருவர் தனது ஆண்டு வருமானத்தில் 2 முதல் 3 சதவிகிதத்தை செய்தித்தாள்களுக்காக செலவழிக்க வேன்டியுள்ளது. ஆனால் பிரிட்டனில் அது 1.5 முதல் 2 சதவிகிதமாக இருக்கிறது. ஆங்கில நாளிதழ்களின் தரத்திற்கு இணையாக சில இந்தி நாளிதழ்கள் வெளியாகின்றன, ஆனால் பிற மொழிகள் என்று வருகிறபோது நிலை மோசமாக இருக்கிறது. தொலைக்காட்சி விஷயத்திலும் பிராந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மக்களை சென்றடைவது குறைவாக இருக்கிறது. குறைவான கல்வியறிவு, இணையதின் வேகம் குறைவாக இருப்பது ஆகிய பிரச்னைகள் இதியாவில் இருப்பதால் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களே இந்தியாவிற்கு இப்போதைக்கு ஏற்றவை. 
தகவல் : The Sunday Indian

Friday 6 May 2011

250 கி.மீ., வேகத்தில் செல்லும் சூப்பர் பஸ்:துபாய் கண்காட்சியில் அறிமுகம்


துபாய்: மணிக்கு 250கி.மீ.,வேகத்தில் செல்லும் திறன் படைத்த 15மீட்டர் நீளம் கொண்ட சூப்பர் பஸ் கான்செப்ட் துபாயில் நடந்த ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.


நெதர்லாந்தை சேர்ந்த டெப்ட் தொழில்நுட்ப பல்கலைகழக வல்லுனர்கள் இந்த சூப்பர் பஸ் கான்செப்ட்டைஉருவாக்கியுள்ளனர். 15 மீட்டர் நீளமும் 2.55 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கான்செப்ட் சூப்பர் பஸ்சில் 24 பேர் பயணம் செய்யலாம்.

பார்ப்பதற்கு சிறிய ரயில் போல் இருக்கும் இந்த சூப்பர் பஸ்(பஸ்சுதான்னு சொல்றாங்க)மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன்கொண்டது.மேலும், இந்த பஸ் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பேட்டரி வாகனம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் பொருத்தப்படும் பேட்டரிகள் 600கேவி திறனும், 800 பிஎச்பி திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இந்த சூப்பர் பஸ் 210 கி.மீ., வரை செல்லும் என்பதும் இதன் தனிச்சிறப்பு.
டிரைவரை சேர்த்து 24 பேர் அமரக்கூடிய இந்த சூப்பர் பஸ்சில் மேல்நோக்கி திறக்கும் 16 கல்விங் கதவுகளும்,6 சக்கரங்களையும் கொண்டுள்ளது. தவிர, பயணிகள் எதிர்பார்க்கும் அனைத்து சொகுசு வசதிகளும் இந்த பஸ்சில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. 

பொருளாதார வளர்ச்சியால் அருகருகே உள்ள நகரங்களுடன் மக்களுக்கு தொடர்புகள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு அருமையான பயண அனுபவத்தை இந்த பஸ் மூலம் கொடுக்க முடியும் என பஸ்சை உருவாக்கிய வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.