Sunday 4 September 2011

டிரான்ஸ்ஃபார்மரில் மின்சாரம் தாக்கி உடல் கருகி ஒருவர் பலி !

                வேலூர்: மின்சார டிரான்ஸ்ஃபார்மரில் வேலை செய்து கொண்டிருந்த போது மின் இணப்பு கொடுக்கப்பட்டதால் அதில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு பேர் உடல் கருகினர்.
அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார். வேலூர் மக்கானை சேர்ந்தவர் பாஷா இருவரும் கூலித்தொழிலாளிகள். இவர்கள், ராணிப் பேட்டையைச் சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் வாசு என்பவரிடம் வேலை செய்து வருகின்றனர்.

வாசு பெண்ட்லென்ட் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மருக்கு பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தத்தை எடுத்திருந்தார். வேலூரில் இன்று நாள் முழுவதும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.


இன்று பகல் 12.30 மணியளவில் சசிகுமார், பாஷா இருவரும் அரசு பெண்ட்லென்ட் மருத்துவமனையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏணி மூலம் ஏறி பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் முன் அனுமதி ஏதும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே முடித்துவிட்டு அப்பகுதிக்கு மின் சப்ளை வழங்கியுள்ளனர். இதனால் பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த சசிகுமார், பாஷா ஆகியோர் திடீரென மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு கருகினர். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

மற்றவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்தை அமைச்சர் விஜய், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் ஆகியோர் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.