Wednesday 14 September 2011

அரக்கோணம் அருகில் சித்தேரி என்ற இடத்துக்கு அருகே ரயில்கள் மோதல்

அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் சித்தேரி என்ற இடத்துக்கு அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பின்னால் வந்த விரைவு பாசஞ்சர் ரயில் மோதி பெரிய விபத்து நேரிட்டது. செவ்வாய்க் கிழமை இரவு 9.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 9 பேர் இறந்தனர், 88 பேர் காயம் அடைந்தனர் என்று சென்னைக்கு நள்ளிரவு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 பெட்டிகள் தடம் புரண்டன, அதில் 3 பெட்டிகள் முழுமையாகச் சேதம் அடைந்தன. அரக்கோணத்திலிருந்து காட்பாடி செல்லும் பாசஞ்சர் ரயில் சிக்னலுக்காக சித்தேரி ரயில் நிலையம் அருகில் நின்று கொண்டிருந்தது. சிக்னல் கிடைத்ததும் அது மெதுவாக நகரத் தொடங்கியது, அப்போது சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் விரைவு பாசஞ்சர் ரயில் அதே பாதையில் வேகமாக வந்து முன் ரயில் மீது மோதியது. இதில் முன் ரயிலின் 5 பெட்டிகளும் பின்னால் வந்த ரயிலின் 3 பெட்டிகளும் தடம் புரண்டு கவிழ்ந்தன. இதனால் ஏராளமான பயணிகள் ரயிலுக்குள் சிக்கிக் கொண்டனர்.இருட்டு, மழையால் பாதிப்பு: அந்தப் பகுதியில் வெளிச்சம் இல்லாமல் இருள் நிலவியதாலும் பலத்த மழை பெய்ததாலும் மீட்பு, உதவிப் பணிகளுக்கு பெருத்த இடையூறு ஏற்பட்டது.மீட்பு, உதவிக்குழுக்கள் விரைந்தன: விபத்து நடந்த சில நிமிஷங்களுக்கெல்லாம் அருகிலிருந்த அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்தும் சென்னை மற்றும் பிற பகுதிகளிலிருந்தும் மீட்பு மற்றும் உதவிக்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்தனர்.வேலூர் மாவட்ட ஆட்சியர்: விபத்து நடந்த தகவல் கிடைத்தவுடனேயே வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன், காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.ஜி. பாபு, வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திர பாபு, ரயில்வே போலீஸ் ஐ.ஜி. சுநீல்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீட்பு, உதவிப் பணிகளை ஒருங்கிணைத்தனர். தீயணைப்புத்துறையும் 108 ஆம்புலன்ஸ்களும் மீட்பு, உதவிப் பணிகளுக்கு உதவின.முதல்வர் ஆணை: விபத்துப் பகுதிக்கு உடனே செல்லுமாறு மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் விஜய்யை முதல்வர் ஜெயலலிதா பணித்தார். வேலூரிலிருந்து மருத்துவத்துறை இணை இயக்குநர் தலைமையில் டாக்டர்கள் குழு விரைந்தது.உடனடி சிகிச்சை: காயம் அடைந்தவர்கள் உடனடியாக அரக்கோணம், சென்னை அரசு பொது மருத்துவமனை, வேலூர் ஆகிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடியாக சிகிச்சை தரப்பட்டது.தேசியப் பேரிடர் நிவாரணக் குழுக்கள்: விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தேசியபேரிடர் நிவாரணக் குழுக்களும் சென்னை, பெங்களூரிலிருந்து சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தொலைக்காட்சிகளில் தெரிவிக்கப்பட்டது.அரக்கோணத்தில் உள்ள ராஜாளி கடற்படை மையத்திலிருந்தும் உதவிக்கு விரைந்தனர்.கூட்டம் அதிகம்: வேலூர், காட்பாடி செல்லும் இரு ரயில்களிலும் பயணிகள் அதிகம் இருந்தனர். செவ்வாய்க்கிழமை வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்கள், மாணவர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் அதிக அளவில் பயணம் செய்தனர்.ரயில்கள் போக்குவரத்து பாதிப்பு: சென்னையிலிருந்து ஈரோடு, சேலம், கோவை, திருவனந்தபுரம், மங்களூர், பெங்களூர் செல்லும் பாதையில் இந்த ரயில் விபத்து நடந்ததாலும் மீட்பு, உதவிப் பணிக்கு குழுக்கள் விரைந்ததாலும் இந்தப் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளும் புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டன.