வறுமையைப் பொறுத்தவரை சில உண்மைகள் உலகளாவிய பொதுமையைக் கொண்டவை. பணக்காரர்களை மேலும் பணக்காரர் களாக்குவது ஏழைகளே. இது இந்தியாவிற்கும் பொருந்தும். இந்தியர்களில் பாதி பேர் அடிப்படை வசதி கள்கூட இல்லாது வறுமையில் வாடுகிறார்கள் என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் சொல்லிவிடலாம்.
அடிப்படை வசதிகள் பெறுவது குறித்த இவர்களது கனவுகள் நிறைவேறாது இருப்பதற்குக் காரணம் சுமார் 1,20,000 கோடீஸ்வரர்கள் (மக்கள்தொகையில் 0.01 சதவிகிதம்) வசம் மொத்த தேசிய வருமானத்தில் 30 சதவிகிதம் குவிந்திருப்பதே. மேலடுக்கிலுள்ள 10 சதவிகித மக்களைத் தவிர்த்துப் பார்க்கும் போது மீதமுள்ள 90 சதவிகிதம் மக்கள் மிகக் குறைந்த வசதிகளுடன் வாழ வேண்டியுள்ளது. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கீழ்தட்டில் இருக்கும் மக்கள் தங்கள் வருமானத்தின் பெரும் பகுதியைச் செலவிடுகிறார்கள். ஏழைகளுக்கான திட்டங்கள் நூற்றுக்கணக்கில் போடப்பட்ட பிறகும் இதுவே நிலை. முதலாவதாக, குடிநீருக்காக பணக்காரர்களைவிட ஏழைகளே அதிகம் செலவிடுகிறார்கள். கிராமம் மற்றும் நகரம் என இரு பகுதிகளிலும் தண்ணீர் எடுத்துவரச் செலவிடும் நேரம் மற்றும் நகர்ப்புறங்களில் தண்ணீர் மாபியாக்களிடம் தண்ணீர் வாங்கச் செலவிடும் பணத்தின் அடிப்படையிலும் ஏழைகள் குடிநீருக்காக அதிகம் செலவிடுகிறார்கள்.
தங்களைவிட வசதியானவர்களுடன் ஒப்பிடுகிறபோது, ஏழைகள் அரிசிக்காக 1.2 மடங்கும், மருந்துகளுக்காக 10 மடங்கும், தண்ணீருக்கு 3.5 மடங்கும் அதிகம் செலவிடுகிறார்கள். எரிபொருட்களைப் பொறுத்தவரை (பெட்ரோல். டீசல்) பணக்காரர்களைவிட ஏழைகள் அதிகம் செலவிடுகிறார்கள். எரிபொருளின் விலை அனைவருக்கும் பொது என்றாலும் சராசரி தனிநபர் வருமானம் மற்றும் நுகர்வுத் தேவை ஆகிய அடிப்படைகளில் கணக்கிடுற போது ஏழைகள் எரிபொருட்களுக்காக அதிகம் செலவிடுகிறார்கள். சாதாரண நபரைவிட பத்து மடங்கு அதிகம் சம்பாதிக்கும் ஒருவர், தனது ஆடம்பர காருக்கான பெட்ரோலுக்குத் தரும் விலைக்கும் ஓர் ஏழை விவசாயி தனது தண்ணீர் மோட்டாருக்கான பெட்ரோலுக்கு தரும் விலையும் ஒன்றே. இதுவே எல்பிஜி கேஸ் சிலிண்டருக்கும் பொருந்தும். நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணை லிட்டர் ஒன்றுக்கு ரூ.12.37. ஆனால் நாடெங்குமுள்ள ஐந்து லட்சம் நியாயவிலைக் கடைகளில் நடைமுறை விலை ரூ.25 என்கின்றன ஊடகச் செய்திகள். இதை நம்பித்தான் இந்தியாவில் சுமார் 16 கோடி ஏழைக் குடும்பங்கள் இருக்கின்றன.
கடன் பெறும் வசதியைப் பொறுத்தவரை வங்கிகளில் பணக்காரர்களுக்கு கடன் கிடைப்பது எளிதாக இருப்பதுடன், வட்டி குறைவாகவும் தரப்படுகிறது. ஏழைகள் கடனை திருப்பித்தர மாட்டார்கள் என்று வங்கிகள் கருதுவதால், அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் பெறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயத்திற்காக கடன் பெறுவதைவிட காருக்காக கடன் பெறுவது மிக எளிது. ஆனால், ஏழைகளுக்கு அளிக்கப்படும் மைக்ரோ பைனான்ஸுட ன் ஒப்பிடுகிறபோது வங்கிகளில் பணக்காரர்கள் கடனை திருப்பித்தருவது மிகக் குறைவு. ஏழைகளுக்காக மானியத்துடன் பல திட்டங் கள் அறிவிக்கப்பட்டாலும், யதார்த்தத்தில் அவற்றின் பலன்கள் சென்றடைவது வசதியானவர்களையே என்பது மிகப்பெரும் முரண்நகை. ஏழைகளுக்கான திட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகின்றன.
நன்றி : பிரசூன் மஜூம்தார் , The Sunday Indian
படங்கள் : Rigth Way
