Monday, 25 April 2011

அரபு எழுச்சி என்பது நாகரிகத்தின் மாற்றம்.

      அமெரிக்கா பல தசாப்தங்களாக இரட்டை நிலைப் பாடுகளைப் பேணிவருகிறது. ஆனாலும் அந்நாடு ஜனநாயகத்தைப் பற்றி பேசி கருத்து சுதந்தரம், முரண்படுதலுக்கான உரிமை மற்றும் மனித உரிமைகள் பற்றி வெட்கமே இல்லாமல் மேடையேறி மற்றொரு நாடுகளுக்கு உரைத்துவருகிறது. உண்மை என்னவெனில் தென் அமெரிக்கா, ஆசியா அல்லது ஆப்பிரிக்கா எந்த இடமாக இருந்தாலும் சரி, மிக மோசமான சர்வாதிகாரிகளை அமெரிக்கா ஆதரித்துள்ளது. அந்த சர்வாதிகாரிகள் தங்கள் குடிமக்களையே மிக மோசமான முறையில் சித்திரவதை செய்து கொன்றவர்கள். தென் அமெரிக்காவில் சிலி, வெனிசுலா, அர்ஜெண்டினா, பிரேசில், நிகராகுவா மற்றும் பொலிவியா ஆகிய நாடுகள் இதற்கு சரியான உதாரணங்களாகும்.
ஆசியாவில் தென்கொரியா மற்றும்  இந்தோனேசியா  சிறந்த உதாரணமாகும்.  பாகிஸ்தானும் கூடத்தான். ஏனெனில் பாகிஸ்தானில் அமெரிக்கா தனது இரட்டை நிலைப்பாடுகளை  அப்பட்டமாகக் காட்டியுள்ளது. பனிப்போர் காலகட்டத்தில் சோவியத் யூனியன் எதிர்த்தரப்பில் இருந்தபோது, அமெரிக்க உத்திவகுப்பாளர்கள் மோசமான சர்வாதிகாரிகளை ஊக்குவிப்பது என்பது தேவையானதென்றும், கருத்து சுதந்தரம், மனித உரிமைகளைப் பொறுத்தவரையில் அவற்றுக்கு மிகவும் எதிரான கம்யூனிசத்தின் முன்னெடுப்பைத் தடுக்கவேண்டும் என்றும் தர்க்கம் புரிந்தனர். சோவியத் யூனியன் மறைந்தது. இனிமேலும் கம்யூனிசம் பல தசாப்தங்களாக எதிரி என்றிருந்தது இல்லாமல் ஆனது. இதன்மூலம் மற்ற நாடுகளை சர்வாதிகாரிகளிடமிருந்து காப்பாற்றி  ஜனநாயகங்களாக மாற அமெரிக்கா உதவும் என்று பலரும் நம்பினார்கள். ஆனால் சோகமான விஷயமாக இந்த நம்பிக்கைகள் முறியடிக்கப்பட்டு நசுக்கப்பட்டன. பயங்கரவாதத்திற்கு எதிரான  யுத்தம் என்கிற சாக்கில் உலகளாவிய அளவில் மோசமான சர்வாதிகாரிகளை ஊக்குவித்து வளர்க்கத்  தொடங்கியது. ஆமாம். உலகிலுள்ள சர்வாதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் அராபிய உலகில் தான் உள்ளனர். அவர்களின் எண்ணெய் வளங்கள்தான் அமெரிக்காவின் சாய்வுக்குக் காரணம். அதைவிட்டு ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் பேசுவதெல்லாம் வாய்சவடால் தவிர வேறொன்றும் அல்ல.

1979 இல் மேற்கு ஆசியாவில் முதல் மக்கள் போராட்டம் நடைபெற்றபோது இப்பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்கள் பிறந்தே இருக்கமாட்டார்கள். அமெரிக்க உத்திவகுப்பாளர்களுக்கு மத்திய கிழக்கு என்றால் எளிதாகப் புரிந்துவிடும். அமெரிக்காவால் மிகவும் தனிமைப்படுத்தப்பட, தண்டிக்கப்பட,  நசுக்கப்பட விரும்பும் நாடான ஈரானைப் பற்றி பேச விரும்புகிறேன். 1979 க்கு பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே அந்நாட்டின் ஆட்சியாளர் ஷா, இஸ்ரேலைவிட அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதனால் அந்நாட்டில் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் செல்வாக்கு மிகுந்த பிரதமரைக் கவிழ்க்க முயன்ற கலகத்துக்கு அமெரிக்கா மகிழ்ச்சியாக ஆதரவு தெரிவித்து ஷாவை  ஆட்சியில் அமர்த்தி இருந்தது. ஏனெனில் அந்தப் பிரதமர் அமெரிக்காவின் கட்டளைகளுக்குப் பணிய மறுத்தார்.  ஆட்சி செய்த ஷா, மக்களிடம் செல்வாக்கு இல்லாதவராக இருந்தார். அத்துடன் சர்வாதிகாரமாக இரும்புப்பிடியில் சித்திரவதை, சிறைவைப்பு மற்றும் முரண்பட்டவர்களை கொலை செய்வது வரை செய்து ஆட்சியை நடத்தினார். 1978 இல் திடீரென்று ஈரான் நகரங்களில் மக்கள் போராட்டத்துக்குத் திரள ஆரம்பித்தபோதுதான் அமெரிக்காவுக்கு உறைத்தது. அயதுல்லா கொமேனி நாடு திரும்பினார். ஷா ஈரானிலிருந்து தப்பி ஓடியதால் ஈரான் இஸ்லாமியக் குடியரசாக மாறியது. அப்போதிலிருந்து அமெரிக்காவின் தீவிர ஆதரவாளராக இருந்த ஈரான் தவிர்க்க இயலாத எதிரியாக மாறியது.

துனிசியாவின் குடிமக்கள் ஆர்த்தெழுந்து அமெரிக்க ஆதரவாளராக இருந்த சர்வாதிகாரியைத் தூக்கி எறிந்தது ஏற்கெனவே நடந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. அவரும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக துனிசியாவை ஆண்டவர். அராபிய நாடுகளில் தாங்கள் வெறுக்கும் சர்வாதிகாரிகளை அதிகாரத்திலிருந்து நீக்குவதற்காக மக்கள் தெருக்களில் திரள்வதைப் பார்க்கும்போது இந்த உணர்வு மீண்டும் எனக்குள் ஏற்பட்டது. கோடிக்கணக்கான மக்களின் அடக்கப்பட்ட உணர்வுகள் ஒரு வடிகாலைக் கண்டறியும் போது எப்படியிருக்கும் என்பதை எகிப்து காட்டியுள்ளது. அந்நாட்டின் அதிபரான ஹோஸ்னி முபாரக்,- அவரும் அமெரிக்க வளர்ப்புதான்.- முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சர்வாதிகாரம் செய்தவர். அவர்,  தனது மகனை அடுத்த ஆட்சி வாரிசாக நியமிக்க முடிவுசெய்திருந்த போது மக்கள் போராட்ட அலை நாடெங்கும் எழுந்துள்ளது. துனிசியாவில் நடந்த மக்கள் எழுச்சியை விடவும், அராபிய நாடுகளில் உள்ள குடிமக்களுக்கு இப்போராட்டம் ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளது
எகிப்து தற்போது வாஷிங்டனுக்கு பல துயர இரவுகளைக் கொடுத்துவருகிறது. தற்போது வரை எகிப்திய அரசு அமெரிக்காவுக்கும் அதேபோல இஸ்ரேலுக்கும் தீவிர ஆதரவு நிலையில் உள்ளது. அராபிய உலகத்திலேயே இஸ்ரேலுடன் மனப்பூர்வமாக ராஜாங்க  உறவுகளைக் கொண்டிருக்கும் ஒரே நாடு எகிப்துதான். அத்துடன் எகிப்துதான் மற்ற அராபிய நாடுகளுக்கு தலைமை வகிக்கும் அந்தஸ்திலும் உள்ளது. கெய்ரோ மற்றும் அலெக்சாண்ட்ரியாவின் தெருக்களில் நடைபெறும் நிகழ்வுகள் மொத்த அரபு உலக நாடுகள் மீது தாக்கம் செலுத்துகின்றன.
பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்ற பெயரில் அப்பாவி பாலஸ்தீனர்கள்மீது இஸ்ரேலியப் படையினர் புரியும் அட்டூழியங்களை எகிப்து அரசு ஆதரிப்பதை அரபு உலக மக்களும் கோபத்துடன் இன்றுவரை பார்த்துவந்துள்ளனர். விக்கிலீக்ஸ் வெளியிட்ட கடிதங்களும் எகிப்திய அரசு பற்றி எந்தப் பிரமைகளும்  அமெரிக்கா கொண்டிருக்கவில்லை என்பதைத் தெரிவித்தது. வாஷிங்டனும் அதன் கூட்டாளிகளும் ஆண்டுக்கு 2 பில்லியன் டாலருக்கும் மேலான உதவித்தொகையைப் பயன்படுத்தி தங்களது பிராந்தியக் கொள்கையை நிறைவேற்றும் ஏஜெண்டாக கெய்ரோவைப் பயன்படுத்தியிருப்பது பகிரங்கமாகியுள்ளது. குறிப்பாக பாலஸ்தீனர்களின் நியாயமான கோரிக்கைகளை ஒடுக்குவதில் அவை நன்கு செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. எகிப்திய மக்களின் எழுச்சி, அதிகம் புகழப்பட்ட மேற்கு நாடுகளின் கூட்டாளியாகச் சொல்லப் பட்டவரின் தகுதியின்மையை உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. சந்தேகமின்றி அப்பிராந்தியத்தில் உள்ள சர்வாதிகார ஆட்சி நடக்கும் அனைத்துப் பகுதிகளிலும் இந்தச் செய்தி எதிரொலிக்கும்.

எகிப்தில் அரசு தூக்கி எறியப்பட்ட விதம் நிச்சயம் கொடுங்கனவைப் போல டெல் அவிவையும் வாஷிங்டனையும் துரத்தும் என்பதில் அதிசயப்பட ஒன்றுமேயில்லை. எகிப்து சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து துருக்கியைப் போன்று மிதவாத இஸ்லாமியக் கட்சியால் ஆளப்போகும் நாடாக மாற உள்ளது. துருக்கியும் சந்தர்ப்பவசமாக எண்ணெய் வளம் நிறைந்திருக்கும் பகுதியில் உள்ளதால், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளராக உள்ளது. துருக்கி தற்போது எடுத்துவரும் நிலைப்பாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலன்களுக்கு எதிராகச் செல்கிறது. இஸ்ரேல் விதித்த  தடையால் பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையே கேள்விக்குள்ளான நிலையில், துருக்கி அம்மக்களுக்கு உதவ ஒரு கப்பலை அனுப்பியது. அந்தக் கப்பலை இஸ்ரேலியப் படையினர் தாக்கி அழித்தனர். அதில் துருக்கியர்கள் மட்டுமின்றி பாலஸ்தீன மக்களுக்கு உதவப்போன அமெரிக்கக் குடிமக்களும் கொல்லப்பட்டனர். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையிலான உறவில் திருப்பம் ஏற்பட்டது. ஏகாதிபத்திய அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய துருக்கி உருவாகும் என்ற நம்பிக்கைகளையும் பலர் இந்த நிகழ்வுக்கு அடுத்து வளர்க்கத் தொடங்கினார்கள். எகிப்தும் மற்றொரு துருக்கியாக மாறுவது அமெரிக்காவுக்குத் தலைவலியாக அமையும். ஆனால் அது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கையில் சென்று சேர்வது பயங்கரக் கனவாக அமையும்.

வெகுநாட்களாக அரசியல்ரீதியாகவும் பொருளாதார வாய்ப்புகளின் அடிப்படையிலும் புறக்கணிக்கப்பட்டவர்களான அராபிய உலகின் குடிமக்கள் சர்வாதிகாரிகளுக்கு எதிராக எழுவார்கள் என்று யாரும் கருதியிருக்கவில்லை. ஆனால் துனிசியா வழியை காண்பித்து அராபிய உலகம் முழுவதும் நெருப்பலை ஏற்பட்டுள்ளது. இன்று சோவியத் யூனியன் உடைந்த நிகழ்வைப் போன்று வரலாறு திரும்பி அமெரிக்காவைப் பார்த்து புன்னகைப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர். தற்போதோ அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான மக்களை கொடூரமான முறையில் தவறான காரணங்களைக் கூறி கொன்றுவருகிறது. ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளைக் கொல்வதைவிட அப்பாவி மக்களைத்தான் அதிகம் கொன்றுவருகிறது.  தற்போது அரபு உலக மக்கள் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். இப்போது இதுகுறித்து பல கோடி டாலர் கேள்வி ஒன்று எழுகிறது. அரபு உலகில் புதிய அரசுகள் எழுவது தவிர்க்கமுடியாதவை என்றும் அவை அமெரிக்காவுக் கும் இஸ்ரேலுக்கும் ஆதரவாக இருக்காதென்பதையும் அந்த இருநாடுகளும் ஏற்றுக்கொள்ளுமா?

இதில் இந்தியாவுக்கும் ஒரு பாடம் உள்ளது. ஆப்கானிஸ் தானில் சோவியத் யூனியன் ஆக்கிரமிப்பு நடத்தியதை கண்டனம் செய்யாமல் இருந்ததால், அரபு உலகில் இந்தியாவுக்கு எதிராக எழுந்த வெறுப்பை பாகிஸ்தான் புத்திசாலித்தனமாகச் சுரண்டிக்கொண்டது. தற்போதோ  அமெரிக்காவின் கூட்டாளியாக இருப்பதால் ஈரானுக்கு எதிராக நிலைப்பாடுகளை வெளிப்படையாக இந்தியா எடுக்கவேண்டி வருகிறது. அரபு உலகில் சர்வாதிகாரிகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை இந்தியா பகிரங்கமாக ஆதரிக்கவேண்டும். அப்படி ஆதரிக்காவிட்டால் இந்தியா பல நண்பர்களை அரபு உலகில் இழக்கும். 

அரபு உலகம் இதுவரை மதத்தீவிரவாதம் மற்றும் சர்வாதிகாரத்தின் பிடியில் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்தது. அரபு உலகம் எழுச்சிபெற இதுவே சரியான நேரம். அமெரிக்க ஆதரவு பெற்ற சர்வாதிகாரத்தை மட்டும் இந்தப் புரட்சி நீக்காது. உலகின் மற்றப்  பகுதி மக்களுடன் ஜனநாயகப்பூர்வமாக இணையும் சற்று தாராளவய மதிப்பீடுகள் மதத்தீவிரவாதத்தை இடம்பெயர்க்கும் எனவும் நம்பலாம். இதுபோன்ற  மாற்றம்தான் இந்தோனேசியாவிலும் நடைபெறுகிறது.  இதன்மூலம் நாகரிக மாற்றம் ஏற்படும்.


அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கசப்பான நேரம்
சவுரவ்குமார் ஷாஹி

இறுகமூடப்பட்ட கதவுக்குப் பின்புறம் உள்ளது சுதந்தரம்.
ரத்தம் கசியும் முஷ்டியால் உடைத்துத்தான் திறக்கமுடியும்
எகிப்திய கவிஞர் அஹ்மது ஷாவ்கி(1869-1932)

அமெரிக்காவும் இஸ்ரேலும் எகிப்தில் நடைபெறும் மக்கள் எழுச்சியைப் பார்த்து, தவித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும் போது ஈரானியப் புரட்சிக்கு இட்டுச்சென்ற  நாட்களும் சம்பவங் களும் ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. டெஹ்ரானில் இருந்த மேற்கு நாடுகள் மற்றும் அமெரிக்கத் தூதரகங்களில் இருந்து அந்நாட்களில் அனுப்பப்பட்ட தந்தி வாசகங்களைப் படித்துப் பார்த்தால் நகைச்சுவையாக இருக்கும். “ஸ்திரத் தன்மையின் பிரதிநிதி" “ஸ்திரத்தன்மை நிலவும் தீவு" “கல்லைப் போன்ற உறுதியான ஆதரவு" ஆகிய வாசகங்கள் உளவுத்துறை தலைவர்களை பகல் கனவு காண வைத்துக் கொண்டிருந் தன.

 வாஷிங்டன் மற்றும் டெல்அவிவ் உளவுத்துறை தலைவர்களிடமிருந்தும் இப்போது இதைப்போன்ற செய்திகள் தான் வந்துகொண்டிருக்கின்றன.  இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளும் அவர்களுடன் எகிப்தின் மிகச்சிறந்த புத்திசாலியுமான பெஞ்சமின் பென் எலிசரும் சேர்ந்து அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது; எகிப்து இன்னமும் நம் கையில் உள்ளது போன்ற செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்ததை இஸ்ரேலிய நிபுணர் கிடியான் லெவி நினைவூட்டுகிறார்.

“அந்தப் பிராந்தியத்தில் நாங்கள் பிடிமானத்தை இழந்துவிட்டோம். மத்தியகிழக்கில் அமெரிக்கக் கொள்கைத் திட்டத்தைப் பொறுத்தவரை தீமையானது அல்ல. அவற்றின் இலக்குகள் புதுமையானவை. ஆனால் ஒரு முதியவரைப் போல அமெரிக்காவின் பரிசீலனை முறைமை காலாவதியானது. அதற்கு ஓர் அர்த்தமும் இல்லை.” என்கிறார் ராபர்ட் க்ரெனியர். இவர் முப்பது ஆண்டுகள் சிஐஏ அமைப்பில் இருந்தவர்.

மற்றொருபுறமோ முபாரக் தனது அரசின் உளவுத்துறைத் தலைவரான ஓமர் சுலைமானை தனக்குத் துணையாக நியமித்தபோது, அவர் இஸ்ரேலியர்கள் மற்றும் அமெரிக்கர்கள் இருவருக்குமே பொருத்தமாக இருந்தார். ஆனால் சுலைமானுக்கு எகிப்தில் உள்ள தெருவில் உள்ள நிலைமை தெரியாது என்பது குழந்தைக்கும் தெரியும். அப்படியெனில் அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? ஏனெனில் அவரைத் தவிர ஆள் யாரும் எகிப்தில் இல்லாததே காரணம். சுலைமான் தனது  பணி வாழ்க்கையில் அதிகாரி களை மேய்த்துப் பழகியவர். அத்துடன் அந்த அதிகாரிகளின் விசுவாசம் எவ்வளவு என்பதையும் சொல்லிவிடுவார். நாட்டின் பாதுகாப்பு அமைப்பினரை சரியான ஒழுங்குக்குக் கொண்டு வருவதுதான் அவரது முதல் வேலையாக எதிர்பார்க்கப்பட்டது.

எகிப்திய ராணுவமும் காவல் துறையினரும் ஆற்றிய பங்கு மிகவும் சுவாரசியமானது. “படையினரும், காவல்துறையினரும் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை அனைத்து வகுப்பினரும் சேர்ந்து நடத்துவதை விளங்கிக்கொண்டனர். முன்பு அடிப்படைவாதிகளையும் போராட்டக் காரர்களையும் துரத்துவது போன்ற நடவடிக்கையை எடுக்கமுடியாது. அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் தங்கள் ஆரோக்கியத்துக்குத் தீமையாக முடியும்   என்பதைத்   தெரிந்துகொண்டனர். ஏனெனில் அரசு அடுத்த நாள் வரை நீடிக்குமா என்றே தெரியாத நிலை இருக்கிறது" என்கிறார் இப்பிராந்தியத்தில் சிஐஏவில் பணிபுரிந்த ராபர்ட் பேயர்.

 இதற்கு நடுவே மேற்கு நாடுகளின் அரசுகள் இந்த மக்கள் போராட்டத்தில் ஆட்சி கவிழுமானால் அடுத்ததாக, சர்வதேச அணு சக்தி முகமையின் தலைவராக இருந்த முகம்மது எல் பராடி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கின்றனர். ஆனால் அவருக்கு எகிப்திய மக்களிடம் அத்தனை ஆதரவு இல்லை.  ராணுவத்தினரால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிலையில் இடைக்கால அரசு அமைந்தால் எல்பராடி தற்காலிகமான தலைவராக நியமிக்கப்படுவார். அவரைப்போன்ற ஆட்கள் மக்கள் செல்வாக்கும் அபாயமும் இல்லாதவர்கள் என்று தளபதிகளுக்குத் தெரியும்.

“நியாயமான தேர்தல் நடக்குமானால், முஸ்லிம் பிரதர்ஹுட்  அமைப்பே வெற்றிபெறும். இஸ்லாமிய கட்சியினர் போல இவர்கள் தீவிரநிலைப்பாடு டையவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் வெற்றிபெற்றால் இஸ்ரேலுடனான ராஜாங்க  உறவுகள்  குறித்து வாக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்துள்ளனர். அப்படி நடத்தப்பட்டால் பெரும்பாலான வாக்காளர்கள் ராஜாங்க உறவை ரத்துசெய்யச் சொல்வார்கள்" என்கிறார் க்வைன் டையர். இவர் அராபிய உலக நிபுணராக லண்டனில் வசித்து வருபவர்.

அராபிய அமெரிக்க எழுத்தாளரான இஸ்மாயில் காலிடியால் தனது ட்விட்டர் செய்தியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் எகிப்துடனான தங்கள் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் ‘சிக்கலாகிவிட்டது’ என்று பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளன. இதற்கு லெபனான், சிரியா, பாலஸ்தீன நாடுகள் ‘லைக்’ போட்டுள்ளன’ என்று குறிப்பிட்டார். நல்ல நகைச்சுவை. 


அதிகாரத்தின் மாறும் சமநிலை


ஹிலாரி லெவ்ரெட்


அமெரிக்காவின் சர்வதேச நிலைப்பாடு பல்வேறு வகைகளில் பிரச்னைக் குள்ளாகியுள்ளது.  மத்திய கிழக்குப் பகுதியில் இது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. அங்கே அதிகாரம், அமெரிக்காவிலிருந்து ஈரான், துருக்கி மற்றும் அதன் கூட்டாளிகள் பக்கம்  சரிகிறது. இதனால் எகிப்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைப் போன்று, மற்ற அரேபிய நாடுகளிலும் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் எகிப்துடன் கொண்ட கூட்டணிக்காக பல்வேறு ராஜதந்திர பலன்களை அனுபவித்து வருகின்றன. அமெரிக்காவின் அறிக்கைகளுக்கு அடியில் உள்ள உண்மை இதுதான். எகிப்திய கூட்டாளியை மட்டம் தட்டிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத் தைப் போன்றே எகிப்து மக்களின் உரிமைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஒரு சடங்குக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திலும் அமெரிக்கா உள்ளது.
தமக்கு முன்பிருந்த காண்டலீசா ரைஸ் போன்றே ஹிலாரி கிளிண்டனும் அராபிய நாடுகளில் அரசியல் மாற்றத்திற்கு ஆதரவான மக்கள் இயக்கங்கள் அமெரிக்காவுக்கு நல்ல செய்திதான் என்று கருதுவதாகவே தெரிகிறது. அந்த நாடுகள் தாராளவாத, ஜனநாயகப் பாதையில் வரும்போது அமெரிக்காவின் மதிப்பீடுகளைக் காப்பாற்றுவதோடு அமெரிக்காவின் முக்கிய ராஜதந்திர உறவுகளின் ஆயுளையும் நீட்டிக்கும் என்பதே கணிப்பாக உள்ளது. ஆனால் இந்த கணிப்புக்கு இன்னொரு பக்கம் அராபிய உலகில் ஏற்படும் அரசியல் மாற்றம் இஸ்லாமிய குடியரசுக்கு ஆதரவாக இருக்காது என்றும் கருதப்படுகிறது.

எகிப்திலும் அராபிய நாடுகளிலும் எவ்வளவு மாற்றங்கள் நடக்கும் என்பதை இனிதான் பார்க்கமுடியும். ஆனால், எகிப்து, துனிசியா அல்லது மேற்குக்கு ஆதரவான அராபிய நாடுகள் தனித்துவம் வாய்ந்ததாகவும் மக்கள் நலன்கள், விருப்பங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கும்  என்பது எங்களது கருத்து. அந்த நாடுகள் ராஜதந்திரரீதியாக அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் பெரிய ஆர்வம் ஏதும் காட்டாது. அத்துடன் இஸ்லாமிய குடியரசுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொள்ளும். காண்டலீசா ரைஸ், தனது பதவிக்காலத்தில் 2006 இல் நடைபெற்ற பாலஸ்தீன தேர்தல்களின் முடிவை தவறாகக் கணித்துவிட்டார். லெபனானின் முன்னாள் பிரதமர் ரபீக் அல் ஹரிரீயின் படுகொலைக்குப் பிறகு, மேற்குக்கு ஆதரவான ஜனநாயகமாக அங்கு மாற்றும் முயற்சி தோல்வி அடைந்தது.

துனிசியா, எகிப்து மற்றும் ஏமனில் நடைபெறும் அரசியல் மாற்றங்கள் அந்தந்த  சமூகங்களின்  எதிர்பார்ப்பு களைப் பிரதிபலிக்கின்றன. ஆனால்  லெபனானில் நடைபெறும் மாற்றம் இதைப் போன்றது என்று யாரும் சொல்வதில்லை. அமெரிக்க கருத்தாளர்களைப் பொருத்தவரையில் லெபனானில் நடக்கும் நிகழ்வுகள் மோசமான திருப்பங்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் பிற அராபிய நாடுகளில் நடைபெறும் மாற்றங்கள் நம்பிக்கைக்குரியதாக உள்ளதாகக் கூறப்படுகின்றன.. ஹிஸ்புல்லா ஓர் அந்நிய சக்தியைப் போல தொடர்ந்து விவாதிக்கப் படுகிறது. அதனால்தான் லெபானிய சமூகம் பாதிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

டெஹ்ரானில் அயதொல்லா செய்யது கடாமி "எகிப்து, துனிசியா, ஜோர்டன் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் ஈரானின் இஸ்லாமியப் புரட்சியால் தூண்டப்பட்டவை" என்றும் வாதாடுகிறார். அத்துடன், “ஓர் இஸ்லாமிய மத்தியக் கிழக்கு என்பது இஸ்லாம், மதம் மற்றும் ஜனநாய கத்தின் அடிப்படையில் உருவாகிவருகிறது" என்றும் கூறியுள்ளதையும் கவனிக்க
வேண்டும்     
(ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பெர்சிய வளைகுடா விவகாரத் துறை இயக்குனராக அமெரிக்காவில் பணிபுரிந்தவர் ஹிலாரி லெவ்ரட். அத்துடன் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஐ.நாவுக்கும் ஆலோசகர்.)


எகிப்து புரட்சியின் உருவாக்கம்

இசாம் அல் அமீன்

நாடே ஸ்தம்பித்தநிலையில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் நாளுக்குநாள் அதிகரித்துவரும் எகிப்திய மக்களின் உறுதியான எதிர்ப்பும், கோபமும்கூட அதிபர் முபாரக்கை இன்னும் பதவியிலிருந்து அசைக்க முடியவில்லை. சவுதிஅரேபியா, லிபியா மற்றும் பாலஸ்தீனிய சர்வாதிகாரத் தலைவர்கள் அவருக்குத் தந்த ஆதரவும் அவரது உறுதிக்குக் காரணம். முதலில் இந்தப் போராட்டங்களின் தொடக்கநிலையில் அரசு ஆடிப்போய்தான் காணப்பட்டது. எகிப்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் ஆளுங்கட்சியில் உள்ள சிலபேர் மீதும் அதிகாரிகள் சிலரின் மீதும் பழிபோட்டன. அதிபரின் மகனும் அடுத்த வாரிசான ஜமால் முபாரக்கின் வலதுகரமாக இயங்கும் அகமது இஸ்சின் பதவிவிலகல் கோரிப் பெறப்பட்டது.

ஊழல் மூலம் கோடீஸ்வரரான ஹுசைன் சலீமின் பதவிவிலகலும் கேட்டுப் பெறப்பட்டது. இவர் முன்னாள் உளவுத்துறை அதிகாரியாகவும் அதிபரின் நம்பிக்கைக்குரிய நண்பராகவும் இருந்தவர். அவரிடமிருந்து 300 மில்லியன் டாலர் பறிமுதல் செய்யப்பட்டதாக துபாய் விமானநிலைய அதிகாரிகள் அறிவித்தனர்.
ஹுசைன் சலீம், தனியார் எரிபொருள் நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இயற்கை எரிவாயுவை இஸ்ரேலுக்கு விற்பதற்காக அந்நாட்டு குழுமத்தினருடன் இணைந்திருந்தார்.  இஸ்ரேல் வாங்கும் எரிபொருளுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டாலர்கள் இஸ்ரேலுக்கு மானியம் தருவதாக 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ‘லெஸ் ஆப்ரிக்ஸ்’ பத்திரிகை தகவல் வெளியிட்டது. எகிப்திடமிருந்து 70 சதவிகிதம் தள்ளுபடியில் எரிவாயுவை இஸ்ரேல் வாங்குவதாக இஸ்ரேலிய செய்தித்தாளான ‘ஹாரட்ஸ்’ சென்ற ஆண்டு ஜனவரி மாதம் அம்பலப்படுத்தியது. ஆனால் இந்த ஊழலை முன்னாள் எகிப்திய பிரதமர் புறக்கணித்தார். அத்துடன் நாடாளுமன்றத்துக்கு இஸ்ரேலுடனான ஒப்பந்த விவரங்களைத் தெரிவிக்கவும் மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அரசு மீது வழக்கு தொடரப் பட்டபோது,  நீதிமன்றத்தில் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அந்தத் தீர்ப்பை அரசு கண்டுகொள்ளவே இல்லை.

எகிப்து அரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராஜதந்திர உறவு பரஸ்பர நலன்களைக் கொண்டது. 2009 ஆம் ஆண்டு  ஜூன் மாதம், ஒபாமா எகிப்துக்கு வருகைதந்தார். இந்த வரலாற்று பிரசித்திபெற்ற பயணத்தில் பிபிசியிடம் பேசியபோது அதிபர் முபாரக், சர்வாதிகாரி அல்லவென்று பதில் கூறினார். இஸ்ரேலின் பாதுகாப்புக்காகத் தான் மேற்குநாடுகள் எகிப்து அரசை தொடர்ந்து ஆதரிக்கின்றன. எகிப்திய அரசு தனது சொந்த மக்களைத் தாக்கியதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ அரசுத் தரப்போ யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை. 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நெடா அகா-சுல்தான் கொல்லப்பட்டபோது, பல மேற்கு நாடு அரசுகள் உடனடியாக ஈரானிய அரசுக்கெதிராக கண்டனங்களை விடுத்தன. ஆனால் பட்டப்பகலில் நூற்றுக்கணக்கான மக்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துள்ள நிலைமையில் யாருமே எதிர்வினை யாற்றவில்லை. இதுபோன்ற குற்றங்களைக் கண்டும் காணாமல் இருப்பது குற்றங்களை மறைத்து குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு சமமானதாகும்.

கடந்த அறுபது ஆண்டுகளில் இஸ்ரேல் மற்றும் எண்ணை வளத்தின் அடிப்படையி லேயே அமெரிக்கா மத்தியகிழக்கு நாடுகளையும், முஸ்லிம் உலகத்தையும் பார்த்து வந்துள்ளது. 32 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா ஈரானை இழந்தது. அங்கே ஷாவின் ஆட்சி தொடர்ந்து நடப்பதற்காக துணைநின்றது. ஆனால் அதிலிருந்து அமெரிக்கா பாடம் கற்றுக்கொண்ட தாகத் தெரியவில்லை.      
கட்டுரையாளர்,  மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய ராஜதந்திர நிபுணர்
நன்றி : The Sunday Indian