Monday, 11 April 2011

நம்பர் ஒன் அசத்தும் இலவச வாக்குறுதிகள்

தமிழகத் தேர்தல் களத்தில் திமுகவும் அதிமுகவும் தங்களது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை ஒருபுறம் அள்ளி வீச, மறுபுறம் அவர்களுக்கு சற்றும் தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள். இவர்களது வாக்குறுதிகளை கேட்டு பல இடங்களில் வாக்காளர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் தொலைக்காட்சி பெட்டி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஆர்.சார்லஸ் அம்பேத்கர் தனது தேர்தல் அறிக்கையில், “எனக்கு வாக்களித்தால் அனைத்து இலவசங்களுடன் தொகுதியில் அனைத்து செல்போன்களுக்கும் மாதம் ரூ.100இலவசமாக ரிசார்ஜ் செய்துதருவேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் கன்னியாகுமாp மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சூசைமரியான் தனது தேர்தல் அறிக்கையில், “ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.ஒரு லட்சம் வட்டியில்லா கடன் வழங்குவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திமுகவின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கண்ணையன் தன்னுடன் தேர்தலுக்கு பணிபுயும் அனைவருக்கும் 3 சென்ட் நிலம் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளதோடு, வெற்றி பெற்றால் அனைத்து வாக்காளர்களுக்கும் தங்க காசு தருவதாக கூறி வருகிறார்.
இந்த அறிக்கைகளில் இருந்து ரொம்பவே வித்தியாசப்பட்டு வாக்காளர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் வாக்குறுதி சேலம் தெற்கு மற்றும் வடக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் எம்..ஷாஜகான் என்பவரது தேர்தல் அறிக்கை தான். இவர் வெற்றி பெற்றால் அனைத்து வாக்காளர்களுக்கும் நேனோ கார், ஜெனரேட்டர் உட்பட 22 பொருட்கள் இலவசமாக தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இவர் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் தசஇயிடம் குறிப்பிடுகையில், “இரண்டு பெரிய கட்சிகளும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. தேவையானவற்றை வழங்குவதாகவும் கூறவில்லை. இன்று எல்லோர் வீடுகளிலும் மிக்சி, கிரைண்டர், டிவி உட்பட அனைத்து பொருட்களும் உள்ளன. ஆனால் மின்சாரம் அடிக்கடி போய்விடுகிறது. அதனால் நான் வெற்றி பெற்றால் ஜெனரேட்டர் தருவதாக மக்களிடம் கூறியுள்ளேன். மேலும் இன்று கார் அத்தியாவசியமாகிறது. எனவே நேனோ கார் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தருவதாக கூறியுள்ளேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பறிமுதல் செய்து மக்களுக்கு இந்தக் கார் வழங்க முடியும். மேலும் நான் மின்வெட்டு காரணமாக மக்களுக்கு அம்மி கல், உரல் போன்ற மாற்று பொருட்களும் தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளேன். நான் வெற்றி பெற்றால் இவை எல்லாவற்றையும் நிச்சயம் வழங்குவேன்”’’ என்கிறார் சிரிக்காமல்..
நன்றி : The Sunday Indian