Wednesday, 15 June 2011

தேர்தல் கணக்கு சமர்பிக்காத 7 சுயேட்சைகளுக்கு நோட்டீஸ்!


நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 117 பேர் தேர்தல் செலவுக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். தாக்கல் செய்யாத 7 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்.13ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளை., நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 10 சட்டசபை தொகுதிகளிலும் 124 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி ஜூன் 13ம் தேதிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் மொத்தம் 117 வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்கை தாக்கல் செய்துள்ளனர். சங்கரன்கோவில் தொகுதியில் இருவரும், கடையநல்லூர், ஆலங்குளம், நெல்லை, பாளை., நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் தலா ஒருவருமாக மொத்தம் 7 பேர் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த 7 பேருமே சுயேட்சை வேட்பாளர்கள்.
இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், "தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. எனவே இனி தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்தால் ஏற்றுக் கொள்ளப்படாது. செலவு கணக்கு தாக்கல் செய்யாத 7 சுயேட்சை வேட்பாளர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கு அந்த வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்" என்றனர்.