Monday, 20 June 2011

ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸின் 100% கட்-ஆஃப் ஏன் தேசிய அவமானம்!

இறுதியாக அது நடந்துவிட்டது! கடந்த சில வருடங்களாக 95%, 96% என்றிருந்த கட்-ஆஃப் மதிப்பெண்கள் இந்த வருடம் 100%ஐ தொட்டுவிட்டது. அறிவியல் மாணவர்களுக்கு ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் கட்-ஆஃப் 100%, இந்து கல்லூரியில் 99%, லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் 97%. இன்று இந்தியாவில் கல்வி என்பது மாணவர்களின் விருப்பத்தை    பொருத்ததல்ல மாறாக அவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பை பொருத்தது.

முதலில் ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸின் கட்-ஆஃப் மதிப்பெண் பற்றிய தர்க்கத்தை பார்ப்போம்! அக்கல்லூரியின் முதல்வர், சந்தையில் நிலவும் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் செயல்படுகிறார். காமர்ஸ் பாடத்தில் 96% மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கேலிக்குரிய வகையில் அதிகரித்திருப்பதால் தனது கல்லூரியில் சேர   காமர்ஸ் மாணவர்களுக்கான கட்-ஆஃப் 96% என்று அவர் முடிவுசெய்திருக்கிறார். வழக்கமாக, அறிவியல் மாணவர்களுக்கு கட்-ஆஃப் 4% அதிகம். ஆக, இந்த முறை அது 100% ஆகிவிட்டது. அதை அவர் 99% என நிர்ணயித்து கேலியிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால் 100% என்று அறிவிப்பது தனது கல்லூரிக்கு பிரபல்யத்தையும், மிகுந்த மதிப்பையும் பெற்றுத்தரும் என்று அவர் நினைத்திருக்கலாம். இது ஒரு காமர்ஸ் கல்லூரி. ஐஐடி-யில் சேரமுடியாது போகும் அறிவியல் மாணவர்கள் தங்களது மிக அதிகமான மதிப்பெண்கள் காரணமாக இங்கு சேர வருகிறார்கள். அடுத்த ஓரிரு வருடங்கள் ஐஐடி நுழைவுத் தேர்விற்காக படித்து அங்கு இடம் கிடைத்தவுடன் இந்தப் படிப்பை பாதியில் விட்டுச்செல்கிறார்கள். இந்த நிலையில் காமர்ஸ் பாடத்தை விரும்பி தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை தராது பாதியில் படிப்பை விட்டுப்போகும் அறிவியல் மாணவர்களுக்கு ஏன் தரவேண்டும்?

100% கட்-ஆஃப் அறிவிப்பு அவர்களுக்கே இடியாகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்னர் தான் பள்ளி இறுதித் தேர்வில்  64% மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாகவும் ஆனால் ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் இடம் கிடைத்து படித்ததாகவும் ஐஐபிஎம்மில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் கூறினார். சில வருடங்களுக்கு முன்னர் தனது மகனை அதே கல்லூரியில் சேர்க்க விரும்பிய போது முடியவில்லை. காரணம், கட்-ஆஃப் 90%க்கும் அதிகமாக இருந்தது. கட்&ஆஃப் அதிகரித்திருந்த அதே வேளையில் கல்லூரியின் உள்கட்டமைப்பில் எந்த மாற்றமும் இல்லாததை அவர் பார்க்க நேர்ந்தது. மேலும் பல வருடங்களுக்கு முன்னர் இருந்த அதே எண்ணிக்கைதான் இப்போதும் (இந்த வருடமும் ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் 272 இடங்கள்தான்). பேராசிரியர்கள் விஷயத்திலும் நிலைமை மோசமடைந்திருக்கிறது. சமீபத்தில் டைம்ஸ் நௌ       தொலைக்காட்சி சானலில் நடந்த விவாதத்தின் போது அக்கல்லூரியின் முதல்வர் பேசிய பேச்சே அதற்கு சாட்சி. இதற்கு முன்னர் நான் அக்கல்லூரியின் பேராசிரியர்களுடன் பேசிய சந்தர்ப்பங்களும் எனக்கு எந்த மகிழ்ச்சியையும்         உண்டாக்கவில்லை.

இங்குதான் நமது கல்வியின் முரண்நகை இருக்கிறது. கல்வியில் செய்யப்படும் முதலீடு எந்த ஒரு நாட்டிற்கும் மிகுந்த   லாபத்தையே தருகிறது. இதையே ஐநா வளர்ச்சி திட்டம் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் கல்வியும் மருத்துவமும் மிகுந்த பற்றாக்குறை நிலவும் விஷயங்களாக இருக்கின்றன. ஆக, சீரழிந்த நிலையிருக்கும் கல்லூரிகள் பெற்றுள்ள கடந்த கால மரியாதை காரணமாகவும், இப்போது நிலவும் பற்றாக்குறை காரணமாகவும் ஏராளமான மாணவர்களை கவர்ந்திழுக்கின்றன. தேசிய கட்டுமானத்தில் தனது பங்களிப்பை அதிகரிக்கும் வண்ணம் தனது கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களை  ஐஐஎம் அதிகரிக்காமல் தங்களிடம் பயின்று வேலைக்கு போகும் மாணவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்க  வேண்டுமென்பதற்காக இடங்களை மிகக் குறைவாக வைத்திருக்கின்றன. ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸ் போன்றவை இடங்களை அதிகப்படுத்தாதிருப்பதன் மூலம் தங்களது கட்-ஆஃப் மதிப்பெண்ணை உயர்த்தி ஏதோ தங்களது கல்லூரி ஆகச் சிறந்த கல்லூரி என்ற எண்ணத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் அளிப்பதோ மிகச் சாதாரண தரமுடைய கல்வி, அதிலும் அவர்களது பேராசிரியர்களின் தரம் மிக மோசமாக இருக்கிறது. தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் தரமான கல்வி தருவது குறித்த எந்த தெளிவான கருத்தும், கொள்கையும் நமது கல்வி அமைச்சகத்திற்கு இருப்பதாக தெரியவில்லை. இதை இரண்டு முறைகளை இணைப்பதன் மூலம் சாதிக்க முடியும். புகழ்பெற்ற கல்லூரிகளில் இருக்கும் இடங்களை அதிகப்படுத்துவது ஒரு வழி. இது போன்ற பல நூறு கல்லூரிகளை நாடு முழுவதிலும் உருவாக்குவது இரண்டாவது வழி. தரமான பேராசிரியர்களை உருவாக்க அரசாங்கம் பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டும்.   இந்த இடத்தில்தான் ஒரு தேசம் என்ற வகையில் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறோம். மிகச் சிறந்த  மாணவர்களை பேராசிரியர் பணிக்கு ஈர்க்க நம்மால் முடிவதில்லை.

தனியார் துறை என்பது மற்றொரு வழி. இங்கு இரண்டு முக்கிய பிரச்னைகள் இருக்கின்றன. தனியார் துறை கல்லூரிகளை    ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய அனுமதிப்பதா அல்லது அவர்களை மிரட்டி பணம் பெற்று அவர்களது வளர்ச்சியை தடுப்பதா என்பதை அரசாங்கம் முதலில் முடிவு செய்ய வேண்டும். தனியார் துறைக்கு லாப நோக்கு இருக்கிறது என்பதை அரசாங்கம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, குறைந்த கால அவகாசத்தில், கல்வித் தரத்தில் பெரும்    முன்னேற்றம் ஏற்படுகிற வகையில் முதலீடுகள் அங்கு அதிகம் வராது. கல்வி மற்றும் மருத்துவத் துறைகளைல் நீண்ட   காலத்திற்கு பிறகே தனியார் துறையால் சிறந்த பங்களிப்பை செய்யமுடியும், அதிலும் பல வருட போட்டிக்குப் பிறகு.

இந்த நிலையில், தரம் மற்றும் தேவை ஆகிய இரு விஷயங்களில் இருக்கும் இடைவெளியை நிரப்ப ஒரு  தீர்மானகரமான கல்விக் கொள்கை அரசாங்கத்திற்கு தேவை. அப்போதுதான் இந்தியாவின் இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸ் போன்ற கல்லூரிகளில் 280 இடங்களுக்கு பதிலாக 2800 இடங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை இந்தியாவின் பெருமையாக இருக்கமுடியும். இல்லாவிடில், அவை  கோமாளித்தனமான வகையில் மேட்டுக்குடி கல்வி நிறுவனங்களாக இருந்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
தகவல் : The Sunday Indian (அரிந்தம் சவுத்ரி | ஜூன் 18, 2011 12:26 )