
இவ்வாறு மாடுகளை விற்பதையும், மாட்டிறைச்சி உண்பதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சர்ச்சையாக்குவது சங்பரிவார்களின் வேலையாகும். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் கூட, ''பசுக்கள்-கன்றுகள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.அவற்றை பாதுகாக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று பா.ஜ.க. கூறியிருந்தது.

மேலும், பசுக்களை பாதுகாப்பது என்பது சாத்தியமல்ல என்று உலகிலேயே பணக்கார கடவுளான[!]திருப்பதி வெங்கடேச பெருமாள் குடிகொண்டிருக்கும் திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து பசுதானத்திற்கு இடைக்கால 144 போட்ட செய்தி பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது.
''திருப்பதி கோவிலுக்கு, கோதானம் வழங்க பிரார்த்தித்துக் கொள்ளும் பக்தர்கள் வழங்கிய பசுக்கள், 900 வரை உள்ளன. இவற்றில் தற்போது, 140 பசுக்கள் மட்டுமே பால் கொடுக்கின்றன. பசுக்களை வளர்த்து பராமரிக்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஆண்டுக்கு மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செலவழித்து வருகிறது. இந்த பசுக்களால், நாள் ஒன்றுக்கு 1,500 லிட்டர் பால் கிடைக்கிறது. திருமலை கோவில் உட்பட திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த பல்வேறு கோவில்களின் பூஜைக்கு பால் பயன்படுத்தப்படுகிறது. கோசாலையில் பசுக்களை பராமரிக்க, 10 பேர் வரை கால்நடை மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது இங்கு ஒருவர் மட்டுமே பணியாற்றி வருகிறார். நிலத்தடி நீர் பற்றாக்குறை உள்ளதால், வெளியிலிருந்து தினமும் 20 டேங்க் வரை பசுக்களின் தேவைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. தொலைதூரத்திலிருந்து கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் பசுக்களினால், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு நான்கு பசுக்கள் இறந்தன.எனவே, கோதானமாக அளிக்கும் பசுக்களை பெற்றுக்கொள்வதற்கு திருப்பதி தேவஸ்தானம் தற்காலிகமாக தடை விதிக்க முடிவு செய்துள்ளது என்கிறது அந்த செய்தி.
தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் குவியும் திருப்பதி தேவஸ்தானத்தால் கூட பசுக்களை பராமரிக்க முடியவில்லை என்றால், அன்றாடங்காய்ச்சியான பாமரன் பால் வற்றிப்போன மாட்டை வைத்து கடடியழ வேண்டும் என சங்கபரிவார் சொல்வது தவறு என விளங்குகிறதல்லவா? எனவே இனியாகினும் பசுவை வைத்து அரசியல் செய்வதை சங்பரிவார கூட்டம் நிறுத்திக்கொள்ளுமா? செத்த பசுவின் தோலை உரித்த மனிதனை கொல்லும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருமா? மனிதனுக்காக படைக்கப்பட்டவைகளை மனிதன் அனுபவிப்பதை தடுக்கும் மனித உரிமை மீறலை சங்பரிவார் கைவிடுமா? பொறுத்திருந்து பார்ப்போமே!
-முகவை அப்பாஸ்.