
இந்தியாவில் சுமார் 46,000,000 துப்பாக்கிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலகிலேயே தனியார்கள் அதிகம் துப்பாக்கி வைத்திருப்பதில் இந்தியாவுக்கு இரண்டாமிடம். 100க்கு 4.2 பேர் துப்பாக்கி வைத்துள்ளனர், ஆனால் பதிவு செய்யப்பட்ட துப்பாக்கிகளின்படி 100க்கு 0.5 பேர் மட்டுமே வைத்திருக்கிறார்கள். ஆக, இந்தியாவில் பதிவு செய்யப்படாத, உரிமம் பெறப்படாத துப்பாக்கிகள் மிக அதிகமாக இருக்கின்றன. கள்ளச்சந்தையில் கிடைக்கும் துப்பாக்கிகளை கொண்டு நடத்தப்படும் கொலைக் குற்றங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது காவல்துறையினருக்கு கடினமாக இருப்பதுடன், கள்ளச்சந்தை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. கான்பூரிலுள்ள மக்ரந்த்பூரில் நூற்றுக்கணக்கான நாட்டுத் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொல்கத்தாவில் பராங்கர் என்ற இடத்திலும், பீகாரில் மன்டாஸ் என்ற கிராமத்திலும், நலந்தாவில் ஆகார்பூர் கிராமத்திலும், மற்றும் பீகார், உத்திர பிரதேச மாநிலங்களில் பல இடங்களிலும் இத்தகைய சட்டத்திற்கு புறம்பான பல துப்பாக்கி தொழிற்சாலைகள் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சட்டபூர்வமான சந்தையில் ஒரு துப்பாக்கி வாங்க ரூ. 70,000 முதல் சில இலட்சங்கள் வரை செலவாகும், அது துப்பாக்கியின் தன்மை மற்றும் நிறுவனத்தை பொறுத்தது. ஆனால் கள்ளச் சந்தையில் இதில் பத்தில் ஒரு பங்கு விலையில் வாங்க முடியும்.
இது துப்பாக்கி குறித்த விஷயம் மட்டுமல்ல, மாறாக அதிகாரம் மற்றும் தான் என்ற கர்வத்துடன் இணைத்து பார்க்கப்பட வேண்டிய விஷயம். இதன் காரணமாகத்தான் தற்காப்பிற்காக தனியார் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. விழாக்களில் (திருமணம் போன்றவை) பயன்படுத்துவதற்கும், வரவேற்பறைகளில் வைப்பதற்கும் (அதிகாரத்தின் குறியீடாக) துப்பாக்கிகளை பலர் வாங்குகிறார்கள். திருமணங்களின் போது வானை நோக்கி சுடப்படும்போது சிலர் கொல்லப்படுவதைப் பற்றி அடிக்கடி செய்திகளில் பார்க்கலாம். அத்துடன், இளம் வயதினர் தற்கொலை செய்துகொள்வதற்கோ அல்லது தங்களுக்கு பிடிக்காத குடும்பத்தினர், உறவினர் அல்லது நண்பர்களை கொல்ல இத்துப்பாக்கிகள் உபயோகிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, சீனா ஆகிய நாடுகளில் தற்காப்புக்காக ஒருவர் துப்பாக்கி வைத்திருக்க அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் பிரேசிலில் இதற்கு அனுமதியிருந்தாலும் வீட்டிற்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
இந்தியாவில் தனியார் ஒருவர் துப்பாக்கி வைத்திருக்க செலவிட வேண்டியிருக்கும் தொகையை பார்த்தால் தற்காப்பு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே உரிமையானதாக இருப்பது தெரிகிறது. துப்பாக்கிக்கு முழுமையான தடை கொண்டுவந்தால் மட்டும் போதாது, கள்ளச்சந்தையில் துப்பாக்கிகள் கிடைப்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். துப்பாக்கிகளின் துணைக் கொண்டு நடக்கும் தற்கொலைகள் மட்டும் கொலைகளின் எண்ணிக்கையை பார்க்கும் போது இந்தியாவில் தனியார்கள் துப்பாக்கி வைத்திருப்பது முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் என்பது விளங்கும்.
தங்கள் உயிருக்கு ஆபத்திருப்பதாக கருதுபவர்கள் தனியார் பாதுகாப்பு படையை அமர்த்திக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி தரவேண்டும். ஒருவரின் உயிர் வாழும் உரிமையானது அடுத்தவரின் உயிரை குடிப்பதாக இருக்கக் கூடாது.
தகவல் : The Sunday Indian