Saturday 2 July 2011

ஞானப்பறவைகள்!

வழக்கமான வாழ்க்கையைத் துறந்து தன்னிலை அறியும் வேட்கையில் வாழ்வின் பாதையை மாற்றி பயணித்து வெற்றி கண்டவர்கள் சித்தர்கள்.

போகர், திருமூலர், கொங்கனார், சுந்தரானந்தர், சிவவாக்கியார், உரோமமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி முனிவர் போன்றோர் பிரபலமானவர்கள்.

யய்யாடி! கோவணத்தைக் கட்டிக்கிட்டு, கையிலே குச்சியை வெச்சிகிட்டு காடு, மலை, கொகைன்னு பெரிய க்ரூப்பே திருஞ்சிருக்கா? ன்னு வடிவேலுத்தனமா கேட்க வேண்டாம். இன்னும் கூட இந்தப்பட்டியல் நீளலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

இவர்கள் பழமைமிகு தமிழ்க் கலாசசரத்திற்கும், அதீத சிந்தனைக்கும் கிடைத்த அரிய பெரும் பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். அன்று சித்தர்கள் என்பவர்கள் உருவம் அற்ற ஓர் இறைவனையே வழிபட்டார்கள்.

அவர்களின் பார்வையில் கடவுள் வழிபாடு என்பது மனிதமனத்தின் செம்மைப்படுத்பட்ட உயர்நிலை. அத்தகைய மேலான மனப்பக்குவத்தை பயிற்சிசியின் மூலம் எவரும் அடையமுடியும் என்பதை அவர்களின் பல பாடல்கள் நிரூபிக்கின்றன.

இறைநிலை, இறைவன் என்கிற தத்துவார்த்தங்களை வைத்துக்கொண்டு மக்களை எமாற்றிடும் ஆன்மீகத்தை கடுமையாகச் சாடியுமிருக்கின்றனர். இது குறித்து பாம்பாட்டிச்சித்தர் பாடல் ஒன்றில்

பூசை செய்தாலே சுத்தபோதம் வருமோ?
பூமி வலம் செய்ததனார் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே ...
என்று ஆன்மீகத்தின் பெயரால் செய்யும் கேலிக்கூத்தை கேள்விக் குள்ளாக்குகிறார்.

அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் அருளிய ஹோம முறைகளும் நமக்கு கிடைக்கின்றன. இந்த ஒரு குறிப்பிட்ட உயர்சாதிப் பிரிவினரால் மட்டுமே நடத்தப்படவேண்டும என்றும், அவர்கள் தான் அதை செய்து பலனை வழங்க வேண்டும் என்ற விதிகளை உடைத்து, ஆர்வம் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்று வலியுருத்துகிறது சித்தரியல்.

வைத்தியம், வான சாஸ்த்திரம், இரசவாதம், சூத்திர சாஸ்த்திரம், யோகம் போன்றவற்றிலும் அவர்கள் தேர்ச்சி கண்டவர்களாக இருந்தனர். ஊனினைச் சுருக்கி, உள்ளொளி பெருக்கும் தன்மையினைக்கண்டு தெளிந்த மேதைகள் அவர்கள்.

இறைபக்தி இல்லாத ஒருவனிடம் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அவையனைத்தும் பயனற்றவைகளாகவே போகும் என்றும்,  இறைபக்தியே ஒருவனை வாழ்க்கையில் உயர்த்தும் என்றும் சொன்ன இடைகாட்டுச் சித்தர் தன் பாடல் ஒன்றில்....

அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே இறைபக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே " என்கிறார்.

சித்தர்களை வகைப்படுத்த முடியுமே தவிர வரையறுக்க இயலாது. அவர்கள் தனித்துவமானவர்கள் ஆதியும் அந்தமும் ஆன இறைவனிடம் ஒடுங்குவதையே இலக்காக கொண்டிருந்தனர். இந்த வகைக்கு பட்டினத்தார், அருணகிரி நாதர், தாயுமானவர் போன்றோரை சொல்லலாம்.

இப்பொழுது நாம் பயன்படுத்தும் சித்த வைத்திய முறை அவர்கள் நமக்களித்த பொக்கிஷமே. உலோகங்கள், உப்புகள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும், பல உடல் பொருட்கள் விலங்குகளின் உடலிலிருந்து கிடைக்கும் கஸ்தூரி, புனுகு சலம், சாணம், முதலியவற்றின் குணங்கள் எல்லாம் கண்டறிந்து அவற்றின் நோய்த்தீர்க்கும் பண்புகளை கண்டறிந்தவர்களும் அவர்களே .

ஜெர்மன், சுவீடன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சித்தர்களின் மருத்துவ குறிப்புகளை வியப்புடன் ஆராய்ந்து வருகின்றன. சீனாவில் அநேகர் சித்த உணவு முறையே பின்பற்றுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆஸ்ரமம் என்ற பெயரில் இவர்களுக்கு மாட மாளிகைகளோ, பக்த கோடிகளோ இல்லை என்பது போல சித்தர்களுக்கு அந்தரங்கமும் இல்லை, இதுவரை வழக்குகளேதும் பதிவானதுமில்லை.

இவர்கள் ரத்தம் குடிக்கும் அரசியவாதிகளுமல்லர், மனித அறிவு தின்னும் சாமியார்களுமல்லர். மாறாக இம்மியளவும் பிரதிபலன் பாராது மனிதகுல நல்வாழ்விற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சித்தர்களும் மகாத்மாக்களே!